ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஓதுவது ஒழியேல்

🌸 ஓதுவது ஒழியேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


ஓதுவது ஒழியேல் : 

ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே. எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.

வாழ்வில் வெற்றியடைந்த முன்மாதிரியாக (Role Models)  சுட்டிக் காட்டப்படும் அனைவரிடமும் காணப்படும் பொதுவானதொரு குணம் ; அவர்கள் சிறந்த வாசிப்பாளர்களாக நிச்சயம் இருப்பார்கள்.

வாழ்வை முன்னேற்றப் பாதையில் நடத்தும், அன்பை மனதில் விதைக்கும், நேர்மையான பாதையில் வழிநடத்தும் நூல்களைத் தெரிந்தேடுத்து வாசிக்க கவனமாக இருத்தல் வேண்டும்.

கடுமையான உடல் உழைப்பு அல்ல, தீவிரமான சிந்தனையே வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும்.

புத்தகம் மூலம் கற்றுக் கொள்ளாதவர், தவறுகள் செய்து அதனால் ஏற்படும் கஷ்டத்திலிருந்தே கற்றுக்கொள்வர்.

அதனால்தான் படிப்பறிவற்ற சமூகத்தில் வயதும், அனுபவமுமே உடையவரே தலைவராக இருப்பர்.

ஒரு சிறந்த மனிதரது வரலாற்றை வாசித்து உணர்ந்தால், அவர் தம் வாழ்வில் பட்ட கடினங்களை நாம் அனுபவிக்காது, வெற்றிகரமான வாழ்க்கைக்கு எதைச் செய்ய வேண்டும்  என்கிற அறிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

கல்விபோல் மன உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று திருக்குறள் சொல்கிறது.

அறம் போதிக்கும் கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம், ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

வாழ்வின் இறுதிவரை நாம் கல்விக்கு எல்லை போடாமல் தொடர்ந்து படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

2 கருத்துகள்: