🌸 இயல்வது கரவேல்.
(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)
இச் செய்யுளின் எளிமையான பொருள் :
‘கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.’
ஒரு பொருளும் இல்லாதவர்க்கு எந்த பிரதிபலனும் எதிர்பாரது, அவர் வேண்டுபவற்றை தம்மால் இயன்ற அளவில் செய்யப்படும் உதவியே கொடையாகும்.
எளியவர், ஆதரவற்றோர் இவர்கள் பசி நீக்குவது மிகச் சிறந்தது. அது உபவாசம் இருத்தலினும் மேலானது. இவ்விதம் பசியாற்றுபவருக்கு என்றும் பசிப்பிணி இல்லை.
நமது அருகில் வாழும் எழை எளிய குழந்தைகள், முதிர் வயதில் கைவிடப்பட்டவர்கள், நோயுற்றோர் இவர்களுக்கு உதவுவது, ஆதரிப்பது, பராமரிப்பது இறைவனுக்கு செய்யும் பணிவிடையாகும்.
இவ்விதம் உதவி செய்பவர்கள் அறத்தை தன் எதிர்கால சேமிப்பாக பெறுவார்கள்.
மழை தரும் மேகம் நன்றியை எதிர்பார்பதில்லை. சூரியன் நல்லவர், தீயவர் எனப் பேதம் பார்த்து ஒளியை வீசுவதில்லை.
அதுபோல நல்ல பண்புடையவர்களிடம் உள்ள செல்வம் ஊருக்கு மத்தியில் அமைந்த கனிதரும் மரமாக, தாகம் தீர்க்கும் நீருற்றாக யாவருக்கும் பயன்படும்.
இந்த கதை இவ்வாக்கியத்தின் பொருளை எளிமையாக புரிந்துகொள்ள உதவும்.
ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார். அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.
அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது. அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.
அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
இத்தகைய குணமுடையவர் நீடித்த புகழையும், இன்பத்தையும் அனுபவிப்பர்.
பிறர்க்கு உதவி செய்யும் குணத்தைவிட மேலானது எதுவும் இல்லை.
உலகில் கொடைப்புகழ் ஒன்றே என்றும் நிலைத்து நிற்கக்கூடியது.
கதை http://athichudi.blogspot.com இலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. நன்றி.
அறம் தர்மம் மி.சிறந்தவை. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ரவி.
நீக்குநன்றாகச் சொன்னீர்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு