1. அறம் செய விரும்பு
“அறம் செய விரும்பு” என்றால் “தனி மனித ஒழுக்கம்”* கடைப்பிடிக்க விரும்பு.
ஆழ்ந்த சிந்தனையும், நிலைத்த தேடலும் அவசியம் என்பதை உணர்த்தும் சொல் “அறம்”.
கடவுளை இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது.
இறைவனை இப்படிக் கூறுவது சரி, இப்படிக் கூறுவது தவறு என்ற விவாதத்தைத் தவிர்த்தபின்
"சூக்கும வடிவத்தில் கடவுள் என்றால் செயல் வடிவத்தில் அறம்"*.
எது அறம்?
மனதை தூய்மையாக வைத்திருப்பதே அறம்.
ஆசையில்லாமல் இருப்பதே மனத்தூய்மையாகும்.
உண்மையாக நடந்தால் ஆசை வராது.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாத செயல்களே அறச்செயல்கள்.
ஏழையர், அனாதைகள், உறவினரால் கைவிடப்பட்டவர்களை ஆதரிப்பதுடன் இறந்தவர்களுக்கான நீத்தார் கடனையும் செய்யவேண்டியது இல்லறத்தானின் அறம்
ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர வரவேற்று மனதார இனிய மொழிகள் பேசுவதே அறம்.
பகை, நட்பு பாராமல் நடுநிலைமையில் நின்று முடிவு சொல்வது என்பதும் சிறந்த அறமாகும்.
ஒருவனுடைய நிலைமாறாத அடக்கம் அறமாகும்.
செருக்கினால் பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.
அறங்களுள் மிகச் சிறந்த அறம் கொல்லாமை. அடுத்த அறம் பொய்யாமை.
இதன் பொருள் அன்பும், உண்மையையும் கடைப்பிடிப்பதை மிஞ்சி வேறு ஒரு சிறந்த தர்மம் எதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக