வெள்ளி, 22 டிசம்பர், 2017

கண்டொன்று சொல்லேல்.

🌸 கண்டொன்று சொல்லேல்.

(ஆத்திசூடி -  உயிர்மெய் வருக்கம்)


14. கண்டொன்று சொல்லேல் :

கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே!  


பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் உண்மையானதொரு பொருளை ; அஃதாவது  உள்ளது உள்ளபடியே நாம் புரிந்து கொள்வதில்லை.

நமது அனுபவங்கள், அனுமானங்கள் மற்றும் நம்பிக்கையின் புரிதல்கள்  அடிப்படையிலேயே நாம் அதைப் பிறருக்கு  வியாக்கியானம் செய்கிறோம்.

ஒரு மாலைப் பொழுதில் அழகியதொரு பூங்காவில்  அநேக மக்கள் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது  அங்கு ஒரு தந்தையும் அவரது சிறு மகனும் வந்து உட்கார்ந்தனர்.

அந்தச் சிறு பையன் மிகுந்த மகிழ்ச்சியோடு உரத்த சத்தமிட்டு ஓடியாடி விளையாடுகின்றான்.

அஃது அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. எரிச்சல் அடைகின்றனர்.

அந்தச் சிறுவனை அவனது தந்தை கண்டித்து அமைதிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் அவரோ சூழ்நிலைகளை மறந்து, தனது கண்களை மூடி ஏதோ ஒரு  தீவிரச் சிந்தனையில் இலயித்திருக்கிறார்.

அந்தத் தருணத்தில் குழந்தையின் விஷமங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாத வாலிபன் ஒருவன் ; அந்தத் தந்தையை உலுக்கி, தயவு செய்து உங்களுடைய குழந்தையை கண்டித்து வையுங்கள் ; அனைவருக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது எனக் கோபமாக கூறினான்.

திடுக்கிட்ட தந்தையின் கண்களின் கண்ணீர்.

அவர் அந்த வாலிபனை  அன்புடன் நோக்கி, மன்னித்துக் கொள்ளுங்கள் ;  இவன் எங்களது ஒரே மகன்.

எனது மனைவி, அஃதாவது இவனது தாயார் சற்று முன்பாகதான் அந்த மருத்துவமனையில் மரித்துப்போனார்.

இந்த அதிர்ச்சியான சூழலில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி குழந்தையை அன்புடன் அனைத்துக் கொண்டார்.

அந்த௯ஷிணம்  இடையூறாக கருதப்பட்டதொரு சூழல் ; துயரம் மிகுந்ததொரு சூழலாக பரிணமித்தது.

எரிச்சலும் இடையூறாகவும் கருதியவர்கள்,  நண்பரே உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என அன்புடனும்  ஆதரவுடன் கேட்டனர்.

ஒரு நிகழ்வைப்  புரிந்து கொள்ளுதல் என்பது நமது பார்வையில்  எவ்வளவு குறைவுடையது இல்லையா? 

சுயநலம் மிகுந்த இன்றைய உலகில் பிறருடைய வாழ்வில் நடக்காத ஒன்றை ; உடன் இருந்து, அது நடந்ததைப் பார்த்தது போலக் கூறி நட்பில், உறவுகளில் பகை ஏற்படுத்துபவரும் உண்டு.

ஒருவர் மீது உள்ள பகைமை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் நிமித்தம் அவதூறு செய்பவர்களும் உண்டு .

அத்தகைய தவறான செய்திகளை நேரிடையாகப் பார்த்ததுபோல் நாம் பரப்புதல் கூடாது. அது பாவம். இத்தகைய மனப்பாங்கு மிக மோசமானது.

நம் கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் முழுமையானது அல்ல. 
தீர ஆராய்ந்து உணர்வதே உண்மையைத் தெளிவிக்கும்.

ஒன்றைக் குறித்த முழுமையான புரிதல் இல்லாது அதைப் பிறரிடம் பகிரும்போது, அது சம்பந்தப்பட்ட மனிதரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்.

ஒவ்வொரு மனிதரின் சூழல்களைப் புரிந்து கொள்ளாது, அவரது செயல்களை விமரிசிக்க கூடாது. பிறரிடம் பகிர்வதும் தவறு.

அது பொய் சாட்சி சொல்லுதலுக்கு சமம். மிகப் பெரும் பாவமுமாகும்.

உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்லுதல் நலம். 

ஒன்றைக் குறித்து முழுமையாகத் தெரியவில்லை என்றால், அதைக் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது உத்தமம்.

2 கருத்துகள்: