சனி, 9 டிசம்பர், 2017

ஆறுவது சினம்.

🌸 ஆறுவது சினம்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்).


கோபம் நெருப்பைப் போன்றது. அதைக் கட்டுப்படுத்த தவறினால் சினமுற்றவரையே அழித்துவிடும்.

அது மனதின் மகிழ்ச்சியையும், முகத்தின் அருளையும் கெடுத்துவிடும்.

எளியவர் அல்லது வலியவர் எவரிடம் கோபம் கொண்டாலும் தீமையே பிறப்பிக்கும்.

எளியவர்மீது காட்டும் சினம் பாவத்தை தரும். வலியார் மீது கொள்ளும் கோபம் தீமை தரும்.

தன்னைவிடப் பிறரை உயர்வாக போற்றிப் புகழும்போது மனம் கொதித்து சினம் ஏற்பட்டால் அது பொறாமையின் அறிகுறி.

தனக்குக் கிடைக்காத ஒன்று பிறர்க்கு கிடைத்து விட்டதை எண்ணி மனம் புழுங்கி அமைதி இழந்தால் அதுவும் பொறாமையால் ஏற்படும் சினம்.

பிறர்க்கு உரிமையானதொரு பொருளை அபகரிக்க முற்படுவதும், அதை அவர் தர மறுக்கும்போது எழும் ஆத்திரம் பேராசையின் விளைவு.

சரியோ, தவறோ தான் விரும்பும்படிதான் செயல்கள் நடக்க வேண்டும் என எண்ணுவதும், அவ்விதம் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லையெனில் ஏற்படும் கோபம் தற்பெருமை, சுயநலம் மற்றும் அகந்தையால் நிகழ்வதாகும்.

ஆக கோபம் என்பது பொறாமை, பேராசை, கர்வம், அகந்தை, தற்பெருமை இவற்றின் பக்கவிளைவுகளாகவும் நிகழ்கிறது.

இவ்வித உணர்வுகள் நமக்குள் இருந்தால் தவறையுணர்ந்து சரி செய்வது நல்லது. இல்லையெனில் அத்தகைய கோபம் நம்மை அழித்துவிடும்.

இத்தகைய அநீதி, பாவம் போன்றவற்றிற்கெதிரான நியாயமாக கோபமடைவது நல்லதுதான்.

ஆனால் அற்பமானவற்றிற்காகவும், நம்மை அவதூறு பேசுகிறவர்களுகெதிராகவும் கோபப்படுதல் நல்லதல்ல.

அத்தகைய சூழலில் கோபமாய் இருக்கும்போது சண்டை போடாதீர்கள்.

நலமானவற்றையும் பேசாதிருங்கள்.

கோபம் ஏற்படுத்தும் இடத்தைவிட்டு அகலுங்கள்.

அமைதியும் பொறுமையையும் கடைப்பிடியுங்கள்.

கோபத்தைத் தவிர்க்க சிறந்த வழி அன்பு செலுத்துதல். எளியவர்க்கு உதவி செய்தல், பொறுமையோடு காத்திருத்தல்.

நமக்குத் தீங்கு செய்பவரை மன்னிக்கும்போது நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம்.

தீமை புரிபவர், சுயநலமிக்கவர், ஏமாற்றுபவர், பொய் பேசுபவர், மாய்மாலமாக நடிப்பவர் இவர்களை விட்டு தூரமாக விலகி வாழ்வது நல்லது.

மணி, நாள், மாதம் ஏன் சில வருடங்களில் பொறுமையுடன் நன்மை செய்து காத்திருந்தால் கோபம் ஆறும்.

ஆறுவது சினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக