வியாழன், 28 டிசம்பர், 2017

இடம்பட வீடு எடேல்.

🌸 இடம்பட வீடு எடேல்.



18. இடம்பட வீடு எடேல் :


உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாக கட்டாதே .

''சிறுகக் கட்டிப் பெருக வாழ்''

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பவை பழமொழிகள்.

அவை நம் வீட்டுக்கும் பொருந்தும்.

ஒரு தலைமுறை முன்பு அடையாளமாகப் பேசப்பட்ட பல அரண்மனை போன்ற பிரமாண்டமான வீடுகள் இன்று விளக்குகூட ஏற்ற வழியின்றி இருளில் அடைந்துள்ளதை ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் காணலாம்.

தேவைக்கு மேல் ஆடம்பர ஆசைகளுக்கு இடம் தந்து வீணாய்க் கிடக்கும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டி பின்பு அதைப் பராமரிக்க வழியின்றி தவிக்கும் பலர் உண்டு.

கை மீறி பிறர் மெச்சுவதற்காகக் கடன் பட்டுத் தேவையற்ற ஆடம்பர அலங்காரப் பொருட்களால் வீட்டை நிறைத்து, அதன் பொருட்டு அல்லல்படுபவர் ஏராளம்.

வீட்டை கட்டுவது என்பது எத்தனை செலவும், சிரமமும் நிறைந்ததொரு செயலோ, அதே போன்று அதைப் பராமரிப்பதற்கும் பணம்  தேவைப்படும்.

இன்று வீடு என்பது வசிப்பதற்கான இடம் என்பதைக் கடந்து, சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது.

செல்வம், அதிகாரம், செல்வாக்கு இவற்றின்பொருட்டு மதிப்பளிக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களால் உண்மையில் பயன் எதுவும் இல்லை. 

அவர்களது அங்கிகாரத்துக்காக வீண் செலவு செய்தல் முட்டாள்தனம்.

பிறரால் மதிக்கப்படுதல் என்பது குணநலன் மற்றும் பண்புகள் சார்ந்து இருத்தல் நலம். நமது குணத்தின் பொருட்டு மதிப்பளிக்கும் உறவினர், நட்பு வட்டத்தை மட்டும் கவனமாக பேணுதல் நல்லது. அந்த எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும் இறுதிவரை உடன் இருக்கும்.

தேவைகளைச் சுருக்கி எளிமையாக, தூய்மையுடன், பகட்டின்றி  வாழ்தலே சிறப்பானது.

ஆடம்பர ஆசைகளுக்கு ஒரு போதும் இடம் தரக்கூடாது.

எந்தவொரு பொருளையும் தெரிவு செய்யும்போது அதன் பயன்பாட்டுத் தன்மையின் அடிப்படையையே முன்னிறுத்தித் தெரிவு செய்தல் வேண்டும்.

வீடு என்பது வெறும் பகட்டான ஆடம்பரமான பொருட்களால் அல்ல அன்பால் கட்டப்பட வேண்டும். எளிமையே என்றும் அழகு. எளிமை என்பது இயல்பாக இருத்தல். 

8 கருத்துகள்: