செவ்வாய், 26 டிசம்பர், 2017

சனி நீராடு.

சனி நீராடு.

16. சனி நீராடு.

இவ் வாக்கியத்திற்குப் பலவிதமான விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அனைத்து விளக்கங்களும் நம் உடல் நலத்தை, மன நலத்தை முன்னிறுத்தியே விவரிக்க முற்படுகிறது.

1. குளிர்ந்த நீரில் குளிக்கவும் :


“சனி” என்றால் “குளிர்ந்த” என்று ஒரு பொருள் கொள்கின்றனர். குளிர்ந்த நீரில் குளிப்பது புத்துணர்ச்சி தரும். அருவிகளில், ஆறுகளில் குளிப்பது மனதுக்கு அளிக்கும் உற்சாகம் நாம் அனைவரும் அறிந்ததே.

எனினும் இக்காலத்தில் குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது என்பது அவரவர் உடல்நலம் சார்ந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

அனுதினம் குளிர்ந்த நீரீல் குளித்தல் நல்லது என்பதே பொருள்.

2. வைகறையில் நீராடு :


பரிமேலழகர் 'சனி' என்ற சொல்லுக்கு 'காரி' என்று பொருள் கூறுகிறார். காரி என்றால் இருள் நீங்காத அதிகாலை நேரம்.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு முகூர்த்த காலத்திற்கு முன்பதாக குளிப்பது சிறந்தது.

ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிடம்.

அதிகாலைப் பொழுதில் குளித்தல் நன்று என்பதே இதன் பொருள்.

3. நதிகளில் நீராடு :


சனி என்றால் மந்தம் என்ற பொருளும் உண்டு. ஆறு மெதுவாகச் செல்லும் இடத்தில் நீராடுதல் நல்லது.

ஆற்றில் குளித்தல் என்பது வாழ்வில் புனிதமாக கருதப்படும் நதிகளில் நீராடுவதற்குத் கவனமாகத் திட்டமிட்டு கருத்தாகத் தேடு என்றும் பொருள் கொள்ளலாம்.

புனித இடங்களுக்குச் செல்வது சுற்றுலா செல்வதுபோல் செல்லக்கூடாது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக கோவில் தரிசனம் வைப்பது உகந்ததல்ல.

குடும்பமாகக் கோவிலுக்கு செல்வதைப் பழக்கமாக கைக்கொள்ள வேண்டும்.

கோவிலுக்குச் செல்வது என்பது மனதை உலக நாட்டங்களிலும், கேளிக்கையிலிமிருந்தும் விடுவிக்க வேண்டும்.

புனிதமான நதிகளில் நீராடுவது என்பது ஒரு கொடுப்பினை. அதற்காகப் பிரயாசப்பட வேண்டும்.

4. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு :


'சனி' என்பதற்கு "சனிக்கிழமை" என்னும் கருத்தில் கூறப்படும் இந்த விளக்கமே பெருவாரியாக எல்லோரும் நம்புகின்றனர்.

"எண்ணெய் குளியல்" என்பது உடல் நலம் கருதி கூறப்படுகிறது.

மூல வாக்கியத்தில் "எண்ணெய்" என்கிற சொல்லாடல் இல்லை.

எனினும் தினசரி எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாவிடினும் வாரத்துக்கு ஒருநாளாகிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நல்லது என்னும் நல்லெண்ண அடிப்படையில் இக்கருத்து எழுந்தது.

ஆக, நம் முன்னோர் உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக கண்டுபிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய்க்குளியலும் ஒன்றாகி விட்டது.

வாரம் ஒருநாள் தவறாமல் எண்ணெய்க்குளியல் செய்து வந்தால் மூட்டு வலி வராது.

மசாஜ் செய்வதற்கும், மூட்டு வலி போக்குவதற்கும் பெரும்பாலும் எண்ணெய்களே மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி உதிராமல் தடுப்பதோடு நரை விழாமல் காத்துக்கொள்ளும். ஒரு முழுமையான எண்ணெய்க்குளியல் உடம்பை சர்வீஸ் செய்தது போலாகிவிடும்.

சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் எண்ணெய்க்குளியல் செய்வது நல்லது.

கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை. தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கரிசலாங்கண்ணித் தைலம் போன்றவற்றைக்கொண்டு எண்ணெய்க்குளியல் செய்யலாம்.

இப்போது உடல் குளிர்ச்சி அடைந்திருப்பதை உணர முடியும்.

போதுமான சூட்டில் வெந்நீர் வைத்து மனைப்பலகையில் உட்கார்ந்து குளிக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து குளிக்கும்போது முதலில் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதன்மூலம் சிறுநீரக கோளாறுகள் வராமல் காக்கப்படும்.

இப்போது சீயக்காய் அல்லது பயத்தமாவு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

குளித்து முடித்தபிறகு காலை உணவாக வெந்தயக்களி சாப்பிடலாம்.

சாப்பிட்டு முடிந்த சிறிது நேரத்தில் கண்கள் குளிர்ந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சுகமான தூக்கம் வரும். உடனே படுத்து தூங்கிவிடக்கூடாது. ஏதாவது சிறு சிறு வேலைகளைச் செய்வது நலம்.

மதிய உணவு மற்றும் இரவு உணவு மிக எளிய உணவாக இருக்கட்டும். இறைச்சி உணவுகளை எடுக்காதீர்கள். இதுதவிர இளநீர் குடிப்பது, உடல் உறவு போன்றவை அன்றைய தினம் வேண்டாம்.

கருத்துக்களில் எது சரி எது தவறு என்பதல்ல முக்கியம். 

இதை முறையாகக் கடைப்பிடித்தால் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

உடல்நலம், மனநலம் நிச்சயம் மேம்படும்.

துணை நின்றவை :

எம்.மரிய பெல்சின்
(https://www.vikatan.com/news/spirituality/62771-the-benefits-of-oil-bath.html)

http://thiruththam.blogspot.in/2009/10/blog-post.html

2 கருத்துகள்: