🌸 ஞயம்பட உரை.
(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)
17. ஞயம்பட உரை :கேட்பவர் மகிழும்படி இனிமையாகப் பேசு .
மனதால் எளிதில் கட்டுப்படுத்த இயலாத உடலின் அவயம் நாக்கு!
மிகப் பெரிய கப்பல் செல்லும் திசையை ஒரு சிறிய சுக்கான் வழி நடத்துகிறது. அதுபோல் நாவின் சொற்களே வாழ்வின் திசையைத் தீர்மானிக்கிறது.
ஒரு சிறிய நெருப்புப் பொறி பெரிய காட்டையே தீக்கிரையாக்கிவிடுவது போல கோபம் நிறைந்த மனதில் இருந்து பிறக்கும் சொல் உறவுகளை அழித்துவிடும்.
நாக்கின் நுனியில்தான் இலட்சுமி வசிப்பதாக ஐதீகம். வாழ்வின் செழிப்பு நாவின் அதிகாரத்தில் அமைந்துள்ளது.
பொய் பேசுபவர்கள், பொய்ச் சாட்சி சொல்பவர்கள், புரட்டு வார்த்தைகளைப் பேசுபவர்கள், கோள் சொல்லி விரோதத்தை உண்டு பண்ணுபவர்களை கடவுள் வெறுத்து அருவருப்பாக எண்ணுகிறார் என பைபிள் கூறுகிறது.
சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது. தன் உதடுகளை அடக்குகிறவன் புத்தியுள்ளவன். பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் எனப்படுவான்.
திருக்குறளின் நான்கு அதிகாரங்கள் : நாற்பது குறள்கள் பேசும் வழி வகைகளை விளக்குகிறது.
1. இனியவை கூறல் :
அன்போடு வஞ்சனையின்றி நியாயமாகக் கூறப்படுவதே இனிய சொல். இன்முகம் காட்டுவது, முகம் மலர வரவேற்பது, இனிய மொழி பேசுவது, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமும் பணிவு உடையவராக இருப்பது இவை அறச்செயல்கள்.
பிறர்க்கு நன்மை அளிக்கும் சொற்களை நயம்பட பேசுபவரை மக்கள் விரும்புவர். தர்மத்தையும், நீதியையும் உணர்த்தும் சொற்களே பண்பு நிறைந்த சொற்களாகும்.
2. புறங்கூறாமை :
ஒருவர் முன்பாக சிரித்துப் பேசி, பின்னால் பழித்துப் பேசுவது மிகவும் தீய செயலாகும்.
3. பயனில் சொல்லாமை :
பயனற்ற சொற்களை பேசுதல் இகழ்ச்சி.
பயனற்ற சொற்களை பேசுதல் தீமை.
பயனற்ற உரையாடல் பயனற்றவரின் பண்பு.
பயனற்ற சொற்களைப் பேசுதல் சிறப்பையும் மதிப்பையும் கெடுக்கும்.
பயனற்ற சொற்களை பேசுபவன் பதர்.
4. சொல்வன்மை :
அவரவர் சொல் திறத்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுதல் வேண்டும்.
எவரிடம் பேசுகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேசுதல் வேண்டும். அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன்,
சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன்,
கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் ;
இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
மனுஸ்மிருதி :
இறுதியாக மனுதர்மம் சொல்வதாவது :சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138
உண்மையைப் பேசுங்கள்.
இனிமையாகப் பேசுங்கள்.
இனிமையற்றதை, உண்மையாகவே இருந்தாலும் பேசாதிருங்கள்.
கேட்பவர் மனம் விரும்பி இனியதாகக் கருதவேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டி பொய் பேசாதிருங்கள்.
முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ரவி.
நீக்குஅருமையான பதிவு. ஞயம்பட உரைத்தீர்கள்
பதிலளிநீக்குநன்றி Madam.
நீக்கு