திங்கள், 19 ஆகஸ்ட், 2019

30. அறனை மறவேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)




t


தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.



"தருமம்" என்பதன் வேர்ச்சொல் "த்ரஸ்". த்ரஸ் என்றால் தாங்குதல் எனும் பொருள்படும். 

மனிதரைத் தாங்கிப்பிடித்து, அவரை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்தும் செயல்கள் தர்மம் எனப்படும்.

எந்தச் செயல்கள் செய்யப்படுவதால் உயிர்களுக்கு நன்மை நிகழ்கிறதோ அவை தர்மம் என்றும் குறிப்பிடலாம். 

தர்மம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்ப்பாரது செய்யும் நற்செயல் எனவும் குறிப்பிடலாம். 

ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு இயல்புத் தன்மை உள்ளது. அது அந்தப் படைப்பின் தர்மம். மிளகாய் என்றால் காரம் என்பது அதன் குணம். அதன் தர்மம். வன உயிரினங்களுக்கென ஒரு தர்மம் உள்ளது.


மனிதர்களின் தர்மத்தைக் குறித்து சாஸ்திரம் இவ்வித விளக்கத்தைத் தருகிறது.


அஹிம்ஸா சத்யம் அஸ்தேயம் 
செளசம் இந்திரிய நிக்ரஹ ஏதம் 
சாமாதிகம் தர்மம் சாதுர்வர்ணே பிரதிர் மனு.

இதன் பொருள், அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், செளசம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய ஐந்து விஷயங்களையும் நியமனமாகக் கொண்ட வாழ்கையை நடத்துதலே தர்ம வாழ்க்கை எனப்படும்.


1. அஹிம்சை :


அஹிம்சை என்பது எந்தவொரு உயிருக்கும் மனவருத்தம் ஏற்படாதவாறு வாழ்வது. இது கொல்லாமை அல்லது உயிர் வதையை மட்டும் குறிப்பதல்ல. 

நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களைப் பிற உயிரினங்களை அதன் இயல்புடன் வாழவிடுவது. இது போல் வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல. 

பிற உயிர்களுக்குப் பிரச்சினை, மனவருத்தம், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் அமைதியாக இருத்தல், அவ்விடம் விட்டு விலகி இருத்தல், துன்பத்தை சகித்தல் என்பவை அஹிம்சை வழி.


2. சத்தியம் : 


சத்தியம் என்பது உள்ளதை உள்ளவாறு உரைத்தல் ஆகும். ஒரு போதும் வஞ்சனையாகப் பொய் பேசக்கூடாது. 

கேட்பவர்களுக்குப் பிரியமாக இருக்கிறது என்பதற்காக மிகைப் படுத்திப் பேசக்கூடாது. உண்மையை திரித்துப் பேசுதல் கூடாது. 

நடக்காத ஒன்றை நடந்தது போல் சுயமாக இட்டுக்கட்டிப் பேசக் கூடாது. உண்மையை பேச இயலாத தர்ம சங்கடமான சூழலில் அமைதி காத்தல் நல்லது. 

உண்மையை மட்டுமே பேசுவதை விட மிகச் சிறந்த தவம் வேறு எதுவும் இல்லை எனத் திருக்குறள் சொல்லுகிறது.


3. அஸ்தேயம் :


அஸ்தேயம் என்பது பிறர் பொருளை விரும்பாதிருத்தல் ஆகும். அடுத்தவர் பொருளை அபகரித்தல் கூடாது.

நேர்மையான வழியில் பொருளீட்டி வாழ்தல் தர்மம் ஆகும்.  நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதில் திருப்தியுடன் வாாழ்தல் நல்லது.


4. சௌசம் :


சௌசம் என்பது தூய்மை. உடல் மற்றும் மனம் தூய்மையாக இருத்தல் அவசியம். 

உடல் தூய்மை நீரால் அமையும். மனம் உண்மை பேசுவதால் தூய்மையாகும். 

குழந்தையைப்  போல் களங்கமற்ற மனதுடன் இருக்கும் மனதில் இறைவன் குடியிருக்கிறார். 

மனதில் கல்மிஷம் புகுந்தால் மேல் சொன்ன மூன்று தர்மமும் அழியும்.


5. இந்திரிய நிஹ்ரஹம் :


கடைசியாக வருவது இந்திரிய நிஹ்ரஹம். 

இது ஐந்து புலன்களின் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். இதற்கு முதல் தேவை இறைபக்தி. இரண்டாவது வைராக்கியம். 

வேத நூல்கள், சான்றோர் சொற்களை மனதில் தொடர்ந்து தியானித்து அதன் கருத்துக்களை மனதில் நிலை நிறுத்துவது மனதை ஒழுங்கு படுத்த உதவும். எனினும் மனதைக் கட்டுப்படுத்த இறைவனிடம் சரணடைவதே சிறந்த வழி. 

மனதைச் சொந்த முயற்சியால் ஒருபோதும் அடக்கமுடியாது. இறைமையை வைராக்கியமாகப் பற்றிக் கொள்பவர் மனதைத் தீய வழியில்  வீழ்ந்து விடாது இறைமை பாதுகாக்கும்.

இது எல்லா மக்களும் மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைத் தர்மங்கள் ஆகும்.


4 கருத்துகள்:

  1. மனதைச் சொந்த முயற்சியால் ஒருபோதும் அடக்கமுடியாது. இறைமையை வைராக்கியமாகப் பற்றிக் கொள்பவர் மனதைத் தீய வழியில் வீழ்ந்து விடாது இறைமை பாதுகாக்கும்

    பதிலளிநீக்கு