வியாழன், 15 ஆகஸ்ட், 2019

29. இளமையில் கல்





இளமையில் கல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)

ஒவ்வொரு வயதிற்கும் ஒரு முக்கியப் பொறுப்பு உள்ளது. 

இளமைப் பருவம் கற்றுக் கொள்வதற்கானது. கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு வறுமையை விடச் செல்வமே பெருந்தடையாக இருக்கிறது. எனினும் கொடிய வறுமை கல்வி வாய்ப்பையே மறுக்கிறது.

இளம் வயதில் படிக்கும் பாடங்கள் பசுமரத்து ஆணி போல் மனதில் பதியும். சிறு வயதில் கற்பது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.மனம் வேறுவிதமான தீய உணர்வுகளில் சிக்கிக் கொள்ளது பாதுகாக்கும். 

இளம் வயதில் கற்பதை முதற் கடமையாகக் கொள்பவர் சிறந்த வாழ்க்கைக்குச் சரியான அடித்தளம் அமைத்துக் கொள்கின்றனர்.

கல்வி என்பது இருவகை. 

ஒன்று உலக அறிவு. அது ஆராய்ந்து அறிந்த தகவல்களை உள்வாங்கிக் கொள்வது. அதை மேம்படுத்துவது. பணியில் திறமையாகப் பயன்படுத்துவது. 

உலக அறிவு பொருள் ஈட்டுவதற்கு உதவுகிறது. இவ்வுலகில் நாம் விரும்பும் வாழ்க்கை அமையப் பொருள் அவசியம்.

மற்றது வாழ்க்கை கல்வி. அது எப்படி வாழ வேண்டும் எனச் சொல்லித் தருகிறது. வாழ்க்கை கல்வி புத்தகம் வழியாகப் படிப்பதல்ல. அது வெறும் தகவல்களைச் சேகரிப்பதும் அல்ல. மாறாக உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் வழியாக இயற்கை அதைக் கற்றுத் தருகிறது. 

இன்றைய உலகில், சமநிலையான வாழ்விற்கு இரண்டு வித கல்வியும் அவசியம்.

எனது கல்லூரி கால நண்பர், இரு கடினமான பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றதை மகிழ்வுடன் நினைவு கூறுவார். அதைச் சொல்லும் போது அவர் முகம் மகிழ்ச்சியில் மலரும். அது மனதை ஒருமுகப்படுத்தி கடினமாக உழைத்ததால் மட்டுமே சாத்தியமானது.

இளம் வயதில் கல்வியில் மனதை ஒருமுகப் படுத்துபவர்கள் மிகச் சிறந்த பணிக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டுகிறது.உலக அறிவு நல்ல வேலையைப் பெற்றுத் தருகிறது.வாழ்க்கையைச் சிறப்புடன் துவங்க உதவுகிறது.

துரதிருஷ்டவசமாக எனது இளநிலை பொறியியல் கல்லூரி வாய்ப்பை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது இன்றும் மனதில் வருத்தத்தைத் தருகிறது.

அதன் விளைவைப் பல வருடங்கள் நான் அனுபவித்தேன்.

பிற்பாடு முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகள் படித்தாலும் சரியான அடித்தளம் இல்லாததால் என்னால் வடிவமைப்பு துறையில் (Designing) பிரகாசிக்க இயலவில்லை. இளமையில் முறையாகப் படிக்காததின் விளைவு இது.

எனது கீழ் பணியாற்றிய ஒரு சிலரை நான் மேற்படிப்பைத் தொடரும் படி ஊக்கப்படுத்தி உதவியிருக்கிறேன். அது இன்றும் எனக்கு மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனது நெருங்கிய நட்புகள் எல்லாம் புத்தக காதலர்கள். அவர்களுடனான மணிக்கணக்காக உரையாடல்கள் எல்லாம் எழுத்துக்களைப் பற்றியதே. இன்று எனது பயணங்களில் புத்தகத்திற்கு என ஒரு தனிப் பை உள்ளது. இப்போது ஐம்பது வயதில் தமிழின் தொன்மையான நூல்களை வாசிப்பது மிகவும் பிடித்தமாக இருக்கிறது. 

உங்கள் உறவில், நட்பு வட்டத்தில், இளம் பருவத்தில் படிப்பில் ஆர்வமுடன் இருந்து ஆனால் வறுமையில் உழன்றால் அவர்களுக்கு உதவுங்கள். சமூக கூடுகைகளில் வாழ்க்கை கல்வியின் அனுபவங்களைப் பகிருங்கள்.

எனினும் ஆத்திசூடி சொல்லும் கல்வி குருகுலம் சார்ந்த முழுமையான வாழ்க்கை கல்வி.

அது இளைமையில் துவங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்வது.

இயற்கை சிறந்த ஆசான். அதன் படைப்புகள் அனைத்தும் புத்தகங்கள்.

காடுகள், மலைகள், வன உயிரினங்கள், பறவைகள், பசும் புல் வெளி, நீர் அருவி, ஏரி, ஆறு, கடல், காற்று, ஆகாயம், சூரிய, சந்திர, நட்சத்திரம் என இயற்கை படைப்பின் பிரமாண்டத்தின் முன்பாக நாம் ஒரு சிறு துகள் கூட கிடையாது.

இயற்கை தனது இரகசியங்களை அவ்வளவு எளிதில் கற்றுத் தருவதில்லை. அதன் மதிப்பை உணர்வது தான் கற்பதற்கானத் தொடக்கப்புள்ளி. இயற்கைத்தாய் முதலில் அனுபவத்தையும் அதைத் தொடர்ந்து அந்த அனுபவங்களிலிருந்து படிப்பினையையும் கற்றுத் தருகிறாள்.

எனவே எப்போதும் இயற்கையிடமிருந்து கற்பதில் கவனமாக இருப்போம். அதற்கு அடிப்படைத் தகுதி தூய மனம், அனைத்துயிரிடமும் அன்பு மற்றும் எந்தச் சூழலிலும் உண்மையாயிருத்தல்.

இந்த உலகத்திற்கு வரும்போது நாம் வெறுமையாக வந்தோம்.

திரும்பிச் செல்லும் போது கற்றுக் கொண்ட கல்வி, செய்த செயல்கள், அவை தந்த அனுபவங்கள், அது சொல்லித் தந்த பாடங்கள்; இவை மட்டுமே உடன் வரும்.

மற்றபடி காதறுந்த ஊசிகூட உடன் வராது.

ஆகையால் ; பிச்சை புகினும் கற்கை நன்றே.

8 கருத்துகள்:

  1. இளமையில் கற்று, இயற்கையோடு விளையாடி, இயல்பாய் வாழ்க்கை, மிக நன்று

    பதிலளிநீக்கு
  2. மிக அற்புதம் ...

    இரு வார்த்தையில் அம்மை கூறியதை ..நீங்கள் மிக அருமையாக சொல்லி இருகின்றீர் ....

    இயற்கை சிறந்த ஆசான். அதன் படைப்புகள் அனைத்தும் புத்தகங்கள்....ஆஹா

    மிக அருமை வாழ்த்துக்கள், திரும்ப திரும்ப படிக்க வைக்கும் வரிகள் அனைத்தும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திசூடி ஒவ்வொன்றும் அற்புதம். இரு வார்த்தைகளில் எத்துணை ஆழமான பொருள். வருகைக்கும், இரசிப்புக்கும், வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பணம் சேர்ப்பதில் கூட ஒரு நிலையில் போதும் என்கிற எண்ணம் பலருக்கு மிக சாதாரணமாக வரும்.

    கல்வி கற்பதில் போதும் என்கிற எண்ணம் பலருக்கு வரவே வராது.

    அதிலும் இளமை கல்வியில் ஆசைப்பட்ட அளவை அடைந்ததாக நினைப்பவர்கள் இருக்கவே முடியாது.

    .....

    ராஜன். சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் Sir. இப்போது வயது கூடக் கூட கற்றது கையளவு கூட இல்லை எனப் புரிகிறது. நன்றி Sir.

      நீக்கு