வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

31. அனந்தல் ஆடேல்.

மிகுதியாகத் தூங்காதே.




சோம்பேறித்தனம் :


"அனந்தல் ஆடேல்" எனின் மிகுதியாகத் தூங்காதே அல்லது "சோம்பேறியாக இருக்காதே" என்று பொருள்.

சோம்பல் என்பது ஓர் இயல்பான மனநிலை. சோம்பல் ஒருவித இனிய போதை. மனம் சும்மா வெட்டியாக இருக்கத்தான் விரும்பும். 

இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டு விட்டால் அது அசையவே அசையாது. அதை முயற்சி செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டு செல்லவேண்டும். 

பெரும்பாலும் இலக்கில்லாமல் இருப்பது தான் சோம்பலுக்கு அடிப்படை.. நாம் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துவிட்டால் போதும் சோம்பல் குறைந்துவிடும். 

சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு நம்மைச் சுற்றி அமைத்துக் கொள்ளும் சூழல் மிக மிக முக்கியம். 

சோம்பலிலிருந்து விடுபடக் கவனம் சிதறடிக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 

வீண்செயல் பாடுகளுக்கு நம்மை ஒருபோதும் ஒப்புக் கொடுக்கக் கூடாது. 

தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், பலவகையான வெற்று அரட்டைக்கான இடங்கள் இவற்றைக் கவனமாக கையாள வேண்டும். இவை பணியில் ஈடுபாட்டை குறைத்துவிடும். முன்னேற்றத்தை தடுக்கும்.

வெறும் உபச்சார சந்திப்புகள், சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மன உறுதியோடுத் தவிர்த்தாக வேண்டும்.

இதற்கு மனதின் விழிப்புணர்வு நிலை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் சிறந்த படிப்பினைகள்.

தெருவில் நடந்து செல்கையில் மரங்கள் சூழ நன்கு பராமரிக்கப்படும் ஒரு வீட்டைக் கண்டால் அங்குப் பொறுப்புடன் ஒரு குடும்பம் வாழ்கிறது எனப்பொருள்.

ஒரு வகுப்பில் சிறப்பாகச் செயல்படும் மாணவருக்கு பின்னணியில் பொறுப்புடன் உழைக்கும் பெற்றோர் இருப்பர்.   அந்த மாணவரிடமும் கருத்தாக உழைக்கும் மனப்பாங்கு இயல்பாகவே அமைந்திருக்கும். 

தலை நிமிர்ந்து வாழும் ஒவ்வொரு ஆளுமைக்கு பின்பும், எடுத்த காரியத்தைக் கவனமாக நிறைவேற்றத் துடிக்கும் பொறுப்புணர்வு மிகுந்து இருக்கும்.

வெற்றி என்பது இலவசம் அல்ல. அது தொடர்ச்சியாக இலக்கை நோக்கி விடாமுயற்சியோடு உழைப்பது.

எதையும் அலட்சியமாக அணுகுதல், தள்ளிப் போடுதல், வீண் பேச்சு, கவனயீனம் இவை வாழ்வின் இறுதியில் சிறுமையைக் கொண்டு வரும். மதிப்பையும் மேன்மையையும் இழக்க நேரிடும்.

சில நல்ல செயல்கள் தனது முன்னேற்றத்துக்கு உதவும் என்று அறிந்தும், அதைக் கூடச் செய்யாது அலட்சியப்படுத்தித் தள்ளிப் போடுபவர்கள், தமக்கு இருக்கும் கொஞ்சம் மதிப்பையும் இழந்து போவார்.

அது ஒரு தனி மனிதரை மட்டும் அல்ல அவர் சார்ந்த குடும்பத்தையே அழித்து விடும். சோம்பேறி ஒரு செயல் செய்யாததற்கு அநேக சாக்குப் போக்குகளைச் சொல்லுவான். 

சோம்பல் உடனிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஒரு நஞ்சு. அதிக தூக்கத்தை விரும்புபவன் தரித்திரம் அடைவான். சோம்பேறியின் வீட்டை முட்புதர்கள் சூழும்.


இரண்டாவது அளவான தூக்கம் :





எவ்வளவு நேரம் தூக்கம் தேவை :


ஒருவரின் வாழ்நாளில் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவில் தூக்கம் மாறுபடும்

குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 14 மணிநேரம் வரை தூங்க வேண்டும். 

நடுத்தர வயதினருக்குச் சுமார் 7லிருந்து 9 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது.

அதற்கு குறைவாகத் தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்

முறையான தூக்கமின்மை பின்னால் மிகப் பெரும் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

சரியான தூக்கம் என்பது படுத்தவுடன் 30 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவான நேரத்துக்குள் உறக்க நிலைக்குச் செல்வதாகும்.

இடையில் ஒரு ஒரு முறை எழுந்து பின் பதினைந்து நிமிடத்துக்குள் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்தின் அடையாளம் என ஆய்வுகள் சொல்கிறது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

சுறுசுறுப்புடன் பணியாற்றச் சரியான அளவு ஓய்வும் தூக்கமும் இன்றியமையாதது.


தூக்கத்தின் வேதியியல் :


உடலில் சுரக்கும் மெலோடனின் என்ற ஹார்மோன் சுரப்பி  தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இரவில் மட்டுமே சுரக்கும்.

சாயங்காலத்திலிருந்து இரவு நேரத்திற்கு செல்லச் செல்ல, உடலில் மெலடோனின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, நாம் தூக்கத்தை உணருகிறோம்.
நள்ளிரவில் மெலடோனின் அளவு உச்சத்தை அடைவதால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். இதே போன்று, காலைப் பொழுது வரவர, உடலில் மெலடோனின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நாம் தூக்கம் கலைந்து விழிக்கிறோம். தூக்கத்தின் வேதியியல் இதுதான்.

வெளிச்சத்தின் அளவை கண்கள் மூளைக்குச் சொல்கிறது. பகல் அல்லது செயற்கை வெளிச்சம் இருந்தால் மெலடோனின் சுரக்கும் அளவு குறையும்.

ஆகையால் இரவு  வெகு நேரம் கண் விழிப்பது உடலுக்கு கேடு. தேக ஆரோக்கியத்தை அது வெகுவாகப் பாதிக்கும். 

தூக்கத்தின் நான்கு நிலைகள் :




நிலை 1: NREM 1(Non Rapid Eye Movement)


முதலாம் நிலை தூக்கம் என்பது குறிப்பிட்ட  உடலின் சுழற்சி நேரம், வெளிச்சம், ஒளி நிலை இவற்றால் ஏற்படுவது. குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்லும் பழக்கவழக்கம் தூக்க உணர்வை முறைப்படுத்தும்.

இந்த நிலையில் விழிப்புணர்வு நிலையில் ஒரு மாற்றம்  ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. மூளை பீட்டா அலைவரிசையிலிருந்து ஆல்ஃபா நிலைக்கு மாறுகிறது. இந்த தூக்க நிலையிலிருந்து எழும் நபர் தான் இன்னும் தூங்கவே இல்லை என நம்புவார். 

நிலை 2 : NREM 2


இரண்டாம் நிலை தூக்கத்தின் போது மனதிற்குப் புறச் சூழலைப் பற்றிய கவனம் குறைகிறது. உடல் வெப்பநிலை குறைகிறது. மூச்சு மற்றும் இதய துடிப்பு வழக்கத்திலிருந்து மெதுவாக  இயங்குகிறது.
இந்த தூக்க நிலை சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும். மொத்த தூக்கக் கால அளவில் பாதி நேரம் இந்த அனுபவத்திலேயே கடந்து செல்கிறது என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.


நிலை 3 : NREM 3


மூன்றாம் நிலை தூக்கத்தின் போது:தசைகள் ஓய்வெடுக்கின்றன. இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம் குறைகிறது. ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் டெல்டா அலைகளை மூளை வெளியிடுகிறது. இவை ஆழமான மெதுவான மூளை அலைகள். இந்த நிலையில் மனதிற்கு சப்தம், ஒளி இவற்றை உணர முடியாது. 


நிலை 4 : ஆழ்ந்த உறக்கம் (Rapid Eye Movement) 

தூக்கத்தின் நான்காவது கட்டத்தில் விரைவான கண் இயக்கம் (REM) தூக்கம் என அழைக்கப்படுகிறது.


REMதூக்கம் போது கண்கள் விரைவாக நகரும். மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.உடல் தளர்வு மற்றும் உறுதியற்ற நிலைக்கு மாறுகிறது. 

இந்நிலையில் கனவு ஏற்படுகிறது.
சராசரியாக, REM கட்டத்தில் சுமார் 90 நிமிடங்கள் தூங்குவோம். REM தூக்கம் முடிந்தவுடன், உடல் வழக்கமாக நிலை 2 தூக்கத்திற்குத் திரும்புகிறது. இரவு முழுவதும் இந்த கட்டங்களில் நான்கு அல்லது ஐந்து முறை தூங்கும் சுழற்சிகள் ஏற்படும்.

அமைதியான உறக்கத்துக்கு :




தூங்குவதற்கு முன் அமைதியை ஏற்படுத்தும் செயல்கள் (தியானம், மென்மையான இசை, நல்ல நூல்கள், படுக்கை அறையின் தூய்மை, வாசனை)  ஒழுங்குபடுத்தவும்.
படுக்கை அறையில் தொலைப்பேசி, மின்னணு பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதையும், எழுவதையும் பழக்கமாகக் கொள்ளுங்கள்.
தூக்கம் வரும் போதும் மட்டும் படுக்கச் செல்லுங்கள். இயல்பாக வரும் தூக்கத்திற்கு ஏற்ப தூக்க நேரத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

எழுந்தவுடன் சுமார் 30 நிமிடம் சூரிய வெளிச்சத்தைப் பெறவும். எளிமையான உடற்பயிற்சி செய்வது நல்லது.

வாழ்க்கை என்பது ஒரு அரிய வாய்ப்பு. 

காலம் மிகக் குறுகியது. 

கிடைக்கும் வாய்ப்புகளை, அளிக்கப்பட்ட நேரத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவோம்.

அதுவே உண்மையான மகிழ்ச்சி. 


6 கருத்துகள்:

  1. ஆரோக்கியம் வேண்டுமென்றால் அளவான தூக்கம் மற்றும் அளவான நல் உணவு வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம்.

    குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் உடல்
    மன ஆரோக்கியத்திற்கு தேவை என்றாலும் நம் சூழ்நிலைகளே பெரும்பாலும் தூங்கும் நேரத்தை தீர்மானித்துகிறது.


    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சில சமயம் சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

      கருத்துரைக்கு மிக்க நன்றி Sir.

      நீக்கு
  3. கருத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள்.

    நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு