ஈச னடி போற்றி
திரு மாணிக்க வாசகர் இறைவன் தமது வாழ்வில் செய்த அதிசயங்களை எண்ணிப் பார்த்து, அந்த நன்றியுணர்வில் திளைத்து, அவரின் திருவடிகளை சரணடைந்து, எண் குணங்களை தொழுது போற்றிப் பாடும் இறை வணக்கப் பாடல் இது.
11. ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
12. தேச னடிபோற்றி சிவன்சே வடி போற்றி
13. நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
14. மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
15. சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
16. ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
பொருள்:
11. ஏக இறைவனது திருவடிக்கு வணக்கம். எனது தந்தையினது திருவடிக்கு வணக்கம்.
12. ஒளியாகப் பிரகாசிப்பவரின் திருவடிக்கு வணக்கம். அன்பாகவே இருப்பவரது திருவடிக்கு வணக்கம்.
13. தமது பக்தர்களின் அன்பில் திளைத்து மகிழும் மாசற்ற தூயவரின் திருவடிக்கு வணக்கம்.
14. நிலையாமையுடைய பிறவியை வேரறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்.
15. சிறப்பு பொருந்திய திருப்பெருந்துறையில் எழுந்தருளிய எமது இறைவனது திருவடிக்கு வணக்கம்.
16. தம்மை நாடும் எவரையும் வெறுத்து ஒதுக்காது இன்பத்தை அருளுகின்ற கருணையையுடைய காருண்யனுக்கு வணக்கம்.
சாரம்:
இறைவனை எட்டு நிலைகளில் போற்றிப் புகழ்ந்து இறைவணக்கம் கூறப்பட்டுள்ளது.
ஏக இறைவன் (நிகரற்றவர்),
தந்தை (பேரருள்),
ஒளி உடல் (மகிமை),
சிவன் (அன்பு),
நிமலன் (மாசற்ற தூய்மை),
பிறவித் தளையிலிருந்து விடுவிப்பவர் (முடிவில்லா ஆற்றல்),
தேவன் (முற்றுணர்வுடையவர்),
ஆராத இன்பம் அருளும் மலை (கருணையையுடையவர்),
ஆகிய எண் குணங்களையுடைய இறைவா உமது திருவடிகளை வணங்குகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக