வியாழன், 8 ஆகஸ்ட், 2019

அவையடக்கம்

 திருவாசகம் - பொல்லா வினையேன். 

23. விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
24. எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
25. பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

பொருள் :

23. வானத்திலும், பூமியெங்கும் நீக்கமற நிறைந்து ஒளிப் பிழம்பாகச் சுடர் விடுபவனே

24. (எண் இறந்து) மனதைக் கடந்து ; தொடக்கமும் முடிவும் அற்ற எல்லையின்றி நிற்பவனே, உன்னுடைய பெருமதிப்புக்குரியச் சிறப்பை, 

25. கொடிய பாவ வினைகளைச் செய்தவனாகிய நான், புகழ்ந்து பாடும் விதம் சிறிதும் அறிகிலேன்.

சாரம் : 


இப்பாடல் மாணிக்க வாசகர் முதலில் இறைவனது அளவற்றப் பெருமையை விவரிக்கிறார். இரண்டாவதாகத் தனது தகுதியின்மையைச் சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக இந்த பொல்லாதவன்  எப்படி இறைவனது பெரும் சிறப்பைச் சொல்ல இயலும் எனத் தம்மைத்தாமே தாழ்த்துகிறார். 

இறைவா! நீர் ஆகாயம், பூமி, இவற்றை நிறைத்து நிற்கும் காற்று, நீர், நெருப்பு என  ஐம்பூதங்களையும் கடந்து பேரோளியாக இருப்பவன்.

தொடக்கமும் முடிவும் அற்றவன். எல்லைகளற்றவன். மனதையும் கடந்து நிற்பவன். இத்தனை பெரும் சிறப்பு மிக்கவன்.

நானோ தீய வினைகளால் சிக்குண்டவன் ; உம்மை புகழுகின்ற விதம் சிறிதும் எனக்குத் தெரியவில்லை.

இவ்விதம் அவையடக்கம் கூறப்பட்டது.

2 கருத்துகள்:

  1. வாசகரே இவ்வண்ணம் சொல்லும் போது நாமெல்லாம் எங்கே... கடவுளே கருணை காட்டுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தாழ்மை உள்ளவகளுக்கு கடவுள் கிருபை அளிக்கிறார்" எனத் திருமறையும் சொல்கிறது. கருத்துக்கு நன்றி ரவி.

      நீக்கு